முக்கிய செய்திகள்

தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உதவவும், கடலோரப் பகுதியின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளவும் கூடுதலாக சிறப்பு நிதியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் பாதிக்கப்படக் கூடிய கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராகுல்காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு, சுகாதாரம், கல்வி ஆகியவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் ராகுல் காந்தி அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள முதல் கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul writes a letter to Modi