முக்கிய செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..

தமிழகத்தில் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா, கனிமொழி உள்பட நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 8ம் தேதி கடைசி நாளாகும்.

மனுக்களை திரும்பப் பெற 11ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் 18ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் அதிமுக தரப்பில் 3 பேரும், திமுக தரப்பில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்போது அதிமுக சார்பில் பாமகவுக்கும், திமுக சார்பில் மதிமுகவுக்கும் தலா ஒரு இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.