ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த லாரி திருமண ஊர்வலத்துக்குள் புகுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் ராம்தேவ் கோயில் உள்ளது. அதற்கு அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை 113-ல் இந்த விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய சோட்டி சாத்ரி டிஎஸ்பி விய்ஜயபால் சிங் சந்து, ”நிம்பாஹெராவில் இருந்து பன்ஸ்வாரா நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த திருமண ஊர்வலத்தின்மீது மோதியுள்ளது.
இதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். அவர்களில் தெளலத்ராம் (60), பாரத் (30), சுபம் (5), சோட்டு (5), திலீப் (11), அர்ஜுன் (15), ஐஷு (19), ரமேஷ் (30) மற்றும் கரண் (28) ஆகிய 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
லாரி ஓட்டுநர் ஊர்வலத்தைக் கவனிக்காமல் தவறுதலாக மோதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முதல்வர் அசோக் கெல்லாட் விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் துயரம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சம்பந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
அவர்கள் அனைவரும் சோட்டி சாத்ரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.