ரஜினி, கமலுக்கு எதிராக வசைபாடும் அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?: குஷ்பு காட்டம்


பெரியார் சிலை குறித்து ஹெச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் அகற்றினர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா ”லெனின் யார் அவருக்கு இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? திரிபுராவில் இன்று லெனின் சிலை அகற்றப்பட்டது, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா பெயரை குறிப்பிடாமல் குஷ்பு கூறியுள்ளதாவது:

”முதுகெலும்பில்லாத அதிமுக அரசுக்கு, இதுபோன்றவர்களை கண்டிக்கும் திராணியும், உறுதியும் இருக்கிறதா? என்பதை பார்க்க விரும்புகிறேன். சில அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வரிந்து கட்டிக்கொண்டு, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திற்கு எதிராக வசைபாடுகிறார்கள். அவர்கள் தற்போது என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.