முக்கிய செய்திகள்

ரஜினிகாந்த் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சென்னையில் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த வேளையில், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பில், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று முதன்முறையாக வெளிப்படையாக ரஜினிகாந்த் அறிவித்தார்.

அதன் பின்னர் தனது ரசிகர்களை மன்றங்களை மக்கள் மன்றங்களாக்கி அவற்றை ஒழுங்குபடுத்தும் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இடையிடையேய் அவர் கூறிய சில கருத்துக்கள் சர்ச்சைகளை உண்டாக்கின.

சமீபத்தில் அவர் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்.

அப்போது கட்சி துவங்கும் அறிவிப்பு வெளியிடுவது மற்றும் வேறு சில முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் நடைபெறும் ரஜினியின் அதிகாரப்பூர்வமான முதல் செய்தியாளர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வருடக்கணக்காக அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான அறிவிப்பே நாளை ரஜினி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.