“ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் திடீர் விடுப்பு சந்தேகத்தை எழுப்புகிறது” : கனிமொழி எம்.பி!..

சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி திடீர் பணி விடுப்பு பல்வேறு தரப்பினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழகத்திலேயே கொரோனா மையப்புள்ளியாக சென்னை உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து 30,444 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 397 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது அதிகளவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டீனாக இருக்கும் ஆர்.ஜெயந்திக்கு பதில் நாராயணசாமி தற்போது புதிய டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டீனாக இருந்த ஜெயந்தி திடீர் விடுப்பு எடுத்தால் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும் ஜெயந்தியின் இந்த திடீர் விடுமுறை பல்வேறு சந்தேகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், டீன் ஜெயந்தியின் இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.

அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.