முக்கிய செய்திகள்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : சிங்கப்பூரில் ராகுல்..

சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை செய்யப்பட்டது குறித்து கூறுகையில், பல ஆண்டுகளாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் எங்கள் தந்தையை கொன்றவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தோம். மன வேதனையில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. ஆனால் தற்போது அவர்களை முற்றிலுமாக மன்னித்து விட்டோம் என்றார். ராகுலின் இந்த பதிலை கேட்டு அங்கு கூடி இருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய ராகுல், அரசியலில் எடுத்த சில நிலைப்பாடுகளுக்காக எங்கள் குடும்பம் கொடுத்த விலை தான் எனது பாட்டி இந்திரா மற்றும் தந்தை ராஜிவின் படுகொலை. அரசியலில் தவறான உந்துதலால் ஒரு விஷயத்தின் பின்னால் நின்றால் நீங்கள் மரணிப்பீர்கள். எங்களுக்கு தெரியும் எங்கள் பாட்டியும், தந்தையும் இறந்து போவார்கள் என்று.

என் தந்தையும், தானும் கொல்லப்படுவார்கள் என என் பாட்டி என்னிடம் கூறினார். என்னுடன் பாட்மின்டன் விளையாடிவர்களே எனது பாட்டியை 1984 ல் கொன்றார்கள். 2016 ல் எனது தந்தை கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரைத்தார். ஆனால் காங் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது அரசின் நிலைப்பாடு, அதில் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது.

எனது தந்தை கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு சூழலே மாறி விட்டது. காலை, பகல், இரவு என எப்போது 15 பேர் சூழ்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2009 ம் ஆண்டு பிரபாகரன் இறந்ததை டிவி.,யில் பார்த்தேன். இரண்டு விதமான உணர்வுகள் என் மனதில் எழுந்தது. ஒன்று, இவரை ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். இரண்டாவது, அவரின் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன்.

 

நான் ஏன் அவ்வாறு உணர்ந்தேன் என புரியவில்லை. உடனே பிரியங்காவிற்கு போன் செய்து பேசினேன். அவர் நமது அப்பாவை கொன்றவர். அவர் இறந்ததற்காக சந்தோஷப்பட வேண்டும். ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. ஏன் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை என தெரியவில்லை என்றேன். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன் என பிரியங்கா என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு ராகுல் பேசினார்.