ராமர் கோயில் பிரச்சினையை தீர்க்காவிட்டால், இந்தியா சிரியாவாக மாறிவிடும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து


ராமர் கோயில் பிரச்சினையை விரைவாக தீர்க்காவிட்டால், இந்தியா சிரியாவாக மாறிவிடும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதிபர் பஷாரின் ஆட்சியில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டதால், அரசுக்கு எதிராக மக்களில் ஒருபகுதியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்தக் கிளர்ச்சி உள்நாட்டுப் போராக உருவெடுத்து கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் கடந்த சில வாரங்களாக டமாஸ்கஸ் நகருக்கு அருகே கிழக்கு கவுட்டாவில் அரசு படைகள் குண்டுவீச்சில் இதுவரை ஆயிரத்துக்கும்மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் சூழலையும், ராமர் கோயில் பிரச்சினையையும் ஒப்பிட்டு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசர்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக, இந்துக்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ளார்.

இதுவரை லக்னோ, டெல்லி, பெங்களூரு, சென்னை, அயோத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முஸ்லிம், இந்து குழுக்களில் 500க்கும் மேற்பட்டவர்களுடன் ராமர் கோயில் தொடர்பாக சமரசப் பேச்சில் ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

”நாட்டில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக, ராமர் கோயில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையை நாம் அதிகமாக கவனம் செலுத்தி, விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும்.

சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும். நல்லெண்ண நோக்கில் அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட வேண்டும். முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு உரிய இடம் அயோத்தி அல்ல.

இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரை, பிரச்சினைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த மதம் அனுமதிப்பதில்லை. அதேசமயம், இந்துக்களும் ராமரை மற்றொரு இடத்தில் வைத்து வழிபாடு நடத்த முடியாது. ராமர் பிறந்த புண்ணிய பூமியாக அயோத்தியை இந்துக்கள் கருதி வருகிறார்கள்

பொதுமக்கள் பயன்படுத்தும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் கூட பிரச்சினைக்குரிய இடத்தில் கட்டமுடியுமா?..

அயோத்தி விவகாரத்தில் நான் எடுக்கும் முயற்சிகள் சிலருக்கு பிடிக்கவில்லை. அதை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பிரச்சினைகள் மீதே விருப்பம் உள்ளவர்கள். அயோத்தி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் வரும் தீர்ப்பை இருதரப்பில் ஒருபிரிவினர் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இதற்கு சமரசப் பேச்சின் மூலமே தீர்வு காண வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா : திருக்கொடியேற்றதுடன் தொடக்கம்

எஸ்எஸ்சி தேர்வு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை..

Recent Posts