இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேச உள்ளார்.
பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை இலங்கை அதிபரின் ஆலோசகர் உடனடியாக மறுத்தார். எனினும் இந்த சர்ச்சை இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில் இலங்கை பிரதமர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.