முக்கிய செய்திகள்

எதிர்ப்புக் கோஷங்களுக்கு இடையே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக வியாழனன்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

பதவியேற்புக்கு ரஞ்சன் கோகய் செல்லும் போது காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ‘ஷேம் ஷேம்’ என்று கோஷமிட்டதையடுத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடுமையாகக் கண்டித்தார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னாள் தலைமை நீதிபதியை மாநிலங்களவை எம்.பியாக நியமித்தது சட்டங்களின் அடிப்படையிலேயே என்றார்.

4 மாதங்களுக்கு முன்பாக அவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார், ராஜ்ய சபா எம்.பி. பதவி குறித்து அவர் ஆட்சியாளர்களுக்கும் நீதித்துறைக்கும் ஒரு உரையாடல் ஏற்பட இது வாய்ப்பளிக்கும் என்ற அவர் நீதித்துறையின் பல்வேறு பார்வைகளை ஆட்சியாளர்கள் தரப்பில் கொண்டு செல்ல எம்.பி. பதவி உதவும் அதற்காகவே தான் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாக ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.

தேசக்கட்டுமானத்தில் நீதித்துறையும், ஆட்சியாளர்களும் ஒரு கட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ரஞ்சன் கோகய் கருதுகிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் இது என்றும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் ரஞ்சன் கோகய் நியமனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

“நம் அரசியல் சாசனம் நீதித்துறையையும் சட்டமியற்றும் துறையையும் பிரித்துப் பார்க்கிறது. நீதித்துறை நம்பிக்கை மற்றும் விஸ்வாசம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவது, ஆனால் இவை அனைத்தும் ரஞ்சன் கோகய் நியமனம் மூலம் பெரிய அடிவாங்கியுள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி சாடினார்.