விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

 செவ்வரக்கு மேகங்கள் ஓளி மறைத்துவிளையாட
மதிற்சுவர் பிளந்த அரசமரத்தில் பறவைகள் ஒசையின்றி அமர்ந்திருக்க
கற்கோபுர சிலைகள் பார்க்க
மெலிதாய் ஓதுவார் குரல் ஒலிக்க
பிரகார மண்டபத்திலிருந்து
விரவிப் பரவுகிறது நாதஸ்வர சுநாதம்

சஹானாவின் குழைவுகளில்
துடிதுடிக்கும் சந்நிதிச் சுடர்கள்

பித்தேறிய உணர்வெல்லாம் பேசுகிறது சங்கதிகளில்

பெருகிய நாதவெளியை எல்லோரும் கடந்து போகிறார்கள்
பேச்சுக்கும் சிரிப்புக்கும் குறைவில்லை

கண் மூடிக் கிறங்கி வாசித்தவர்
கண் திறக்கையில் சிற்பத்திலிருந்து வெளிவந்த பதுமையென
மலர்ச்சரத்தின் சுகந்தம் வீச
மண்டபத்தூணில் சாய்ந்தபடி
எதிரே அமர்ந்திருந்தாள் ஒருத்தி

இசை பயிலும் அவள்
வாசிப்பின் முடிவில்
பிரமாதமென சைகை காட்டி
கருணை நலுங்கும் கண்களோடு நாதஸ்வரக்காரரை பார்த்து
பணிந்து ஒரு வந்தனம் செய்தாள்

நெகிழ்வில் பேச்சற்று வணங்கிய அவருக்கு
ஒரு மாதத்துக்கு போதுமானதாய் இருந்தது அது.

Ravisubramaniyan’s poem on music space