ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த அருண் ஜேட்லி..

தற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரையிலான காதலத்தில் ரிசர்வ் வங்கி பகுத்தறியாமல் கொடுத்த கடனை தடுப்பதில் தோல்வி அடைந்ததுதான் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் சுயாட்சியையும், சுதந்திரத்தையும் மத்திய அரசு மதிக்கவில்லை. மத்திய அரசின் நெருக்கடிக்கு உட்பட்டு செயல்படுகிறோம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் ரிசர்வ் வங்கியைக் குற்றம்சாட்டி அருண் ஜேட்லி பேசியுள்ளார்.

டெல்லியில் இந்தியா-அமெரிக்க கூட்டமைப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று நடந்தது. அதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று பேசியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபின், 2008 முதல் 2014-ம் ஆண்டுவரை பார்த்தால், பொருளாதாரம் என்பது செயற்கையாகவே இழுத்துச் செல்லப்பட்டது.
வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தன. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்ற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுத்தன. இதைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அப்போதே ரிசர்வ் வங்கி இதைத்தடுக்காத காரணத்தால்தான், இப்போது நாட்டில் வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின், கடன் அளிப்பது 14 சதவீதம் இருந்த நிலையில், அதை 31 சதவீதமாக உயர்த்தினோம்.

2014-ம் ஆண்டுக்குப் பின் மத்திய அரசு எடுத்து பல்வேறு நடவடிக்கையால் அரசின் வருவாய் அதிகரித்தது. 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுவரை அரசுக்கு வரிசெலுத்துவோர் அளவு இருமடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 6.8 கோடியாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.