ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா..

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாக நிலவி வந்தது. இருதரப்பு முரண்பாடுகளின் உச்சமாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த அக்டோபரிலேயே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திடீரென உர்ஜித் படேல் சொந்த காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், இந்தப் பதவியை வகித்ததற்காக பெருமிதம் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் விவகாரம் என பல விவகாரங்களில் மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கிக்கு கருத்து வேறுபாடு நிலவுகிறது.

கடந்த அக்டோபரில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான இயக்கத்தை மத்திய அரசு பறித்துவிட்டதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதற்குப் பதில் கொடுத்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “2008 முதல் 2014 வரை, கடன் அளிப்பதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுதான் வாராக்கடன் அதிகரிக்கக் காரணம்.” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ரிசர்வ் வங்கியில் ஆறு ஆண்டுகள் துணை ஆளுநராகவும் ஆளுநராகவும் பணியாற்றியுள்ள அவர் பெரிய சாதனையை விட்டுச்செல்கிறார் எனவும் பாராட்டியுள்ள மோடி, அவரது ராஜினாமா மிகப்பெரிய இழப்பு எனவும் கூறியுள்ளார்.

“ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும் ஆளுநராகவும் உர்ஜித் படேலின் சேவையைப் பாராட்டி அவரது முடிவை அரசு ஏற்றுக்கொள்கிறது. அவருடன் பணியாற்றியது பலனடைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டாக்டர் படேலின் சிறப்பான பொது சேவை மேலும் தொடர்வதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.