ரிசர்வ் வங்கிக்கு சுயாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது.
அதேசமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் குழப்பத்துடன் இருப்பதால்,
அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், “ ஆப் கவுன்சில்: தி சேலஞ்சஸ் ஆப் தி மோடி-ஜேட்லி எக்கானமி” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அந்த நூல்விரைவில் வெளிவர உள்ளது.
சமீபத்தில் மத்திய புள்ளியியல் நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அதில் அடிப்படை ஆண்டாக 2004-05 வைப்பதற்குப் பதிலாக, 2011-12-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கணக்கிட்டு பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.
அதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசின் கணக்கீட்டில் குழப்பம் இருப்பதாக எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தனர், சர்ச்சையாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அரவிந்த் சுப்பிரமணியன் இதுகுறித்து பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
”ஒரு பொருளாதார நிபுணராக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த புள்ளிவிவரங்களில் குழப்பம், சந்தேகங்கள் எழுந்தால், அதை முறைப்படி விளக்க வேண்டியது அவசியமாகும்.
ஜிடிபி கணக்கிடும் விஷயத்தில் சந்தேகம் உண்டாகிவிட்ட நிலையில், அதை விளக்கிக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி, சந்தேகங்களையும், நிலையற்ற சூழல் நிலவுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
முறையான பொருளாதார வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து, விசாரணை செய்து, அந்தக் குழப்பங்களுக்கு விடை காண வேண்டும்.
நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி (ஜிடிபி) குறித்த புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவது மிகக்கடினமான, தொழில்நுட்பச் சிக்கல் நிறைந்த பணி. பொருளாதார புள்ளிவிவரங்கள் தேர்ந்த நிபுணர்களை அந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
பொருளாதார நிபுணத்துவம் இல்லை என்ற நிலையில், அரசு நிறுவனங்கள் ஜிடிபி கணக்கிடும் முறையில் தலையிடக்கூடாது.
நான் எழுதிய புத்தகத்தில் பண மதிப்பிழப்பு குறித்த முடிவு எடுப்பதற்கு முன் என்னிடம் மத்திய அரசு ஆலோசித்ததா என்பதற்கான விடை இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஆனால், என் நினைவுகளில் இருந்தவற்றைப் பதிவிட்டு இருக்கிறேன்.
அரசின் பதவியில் இருந்தபோது, பண மதிப்பிழப்பு குறித்து விமர்சிக்காமல், இப்போது நான் விமர்சிக்கிறேன் என்றுகூட என் மீது விமர்சனங்கள் வருகின்றன.
நான் என் புத்தகத்தை விற்பனை செய்வதற்காகப் பேசுகிறேன் என்றெல்லாம்கூடப் பேசுகிறார்கள். மக்கள் என்ன சொன்னாலும் அதுதான் சரி.
என்னுடைய இந்தப் புதிய புத்தகத்தில், நான் புதிருக்கு ஒரு கவனத்தைக் கொடுத்திருக்கிறேன். பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் விளைந்த தாக்கம் என்பது மிகக்குறைவுதான்.
பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறைவு என்று வைத்துக்கொண்டால், இப்போது பொருளாதார வளர்ச்சி குறித்த ஜிடிபி கணக்கீடு முறை சரியாகக் கணக்கிடவில்லை என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் நமது பொருளாதாரம் மிகவும் நெகிழ்வுத்திறன் கொண்டது.
பணி மதிப்பிழப்புக்கு முன் 6 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் இருந்தது. ஆனால், அதன்பின் சராசரி 6.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
சமீபகாலமாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே உரசல்போக்கு நிலவுகிறது.
என்னைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் சுயாட்சி, சுதந்திரம் காக்கப்பட வேண்டும். வலிமையான நிறுவனங்கள் இருந்தால் மட்டும்தான் நாடு நலன் பெற முடியும்.
பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கும் முன் கூட்டுறவு, ஆலோசனை இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்”.
இவ்வாறு அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.