7.87 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல், வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இரு அரசுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் நடக்கும் போது, நடுவர் மூலம் பணத்தை செலுத்தும் எஸ்க்ரோ(escrow) கணக்கு முறையும் நீக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளை வலிமையற்றதாக்கிய பிரதமர் அலுவலகம்: உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம்
இந்த அம்சங்கள் அனைத்தும் இரு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் முன்பு நீக்கப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்போம், ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவருவோம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு தளவாட கொள்முதலில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல்தடுப்பு அம்சங்களையே நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘எஸ்கரோ’ கணக்கு என்பது, மூன்றாவது நபரை நடுவராக வைத்து இரு பெரும் நிறுவனங்கள், இரு அரசுகள் வர்த்தகம் செய்வதாகும்.
அதாவது, வாங்குபவரின் முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தல், விற்கும் நிறுவனத்துக்கு பணம் முறையாகக் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதாகும்.
விவரங்கள் இல்லை
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணையாகப் பிரதமர் அலுவலகமும் பேச்சு நடத்திய விவரம் (தி இந்து ஆங்கிலம் வெளிக்கொண்டு வந்தது),
ஊழல் தடுப்பு அம்சங்கள் நீக்கப்பட்ட விவரம் ஆகியவை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இரு விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.
நிரந்தர பாதுகாப்பு கொள்முதல் முறை(டிபிபி) பிரிவுகளில், தேவையில்லாத தலையீடுகள், இடைத்தரகர்கள் அல்லது இடைத்தரகர்கள் கமஷன் தடுப்பது, டசால்ட் நிறுவனம்,
எம்பிடிஏ நிறுவனம்(பிரான்ஸ்)ஆகியவற்றின் கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகிய அம்சங்கள் உயர்மட்ட அரசியல் தலையீட்டால் கைவிடப்பட்டுள்ளன.
தி இந்துவுக்கு (ஆங்கிலம்) கிடைத்த அதிகாரபூர்வ ஆவணங்களின்படி, கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) அதன் தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து,
இரு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்க 8 அம்சங்களை நீக்கி ஒப்புதல் பெற்றுள்ளது.
இவை அனைத்தும், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தபின் நடந்துள்ளது.
இந்த 8 அம்சங்கள் நீக்கப்பட்டதைப் பதிவு செய்து, அதை துணை அட்மிரலும், பாதுகாப்பு கொள்முதல் குழுவின் உறுப்பினரான அஜித் குமார் கையொப்பமிட்டுள்ளார்.
மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த 8 அம்சங்களையும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு கைவிட்டுள்ளது.
இந்த ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் இரு அரசுகளுக்கு இடையே நடந்தாலும், அதைச் செயல்படுத்துவது, விமானங்களையும், தளவாடங்களையும் அளிப்பது டசால்ட் மற்றும் எம்பிடிஏ ஆகிய இரு தனியார் நிறுவனங்களாகும் என்பது கவனிக்கத்தக்கது.
டசால்ட் என்பது ரஃபேல் விமானம் தயாரிக்கும் நிறுவனம், எம்பிடிஏ பிரான்ஸ் என்பது, இந்திய விமானப்படைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் நிறுவனமாகும்.
எதிர்ப்பு
ஆனால், இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட கொள்முதல் குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பி. சிங்(ஆலோசகர்), ஏ.ஆர். சுலே(விமானப்படை நிதிமேலாளர்), ராஜீவ் வர்மா(இணைச் செயலாளர் விமானப்படை) ஆகியோர் தங்கள் எதிர்ப்பை ஆவணமாகப் பதிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு கொள்முதல் வழிமுறைகளின்படி, அனைத்து விதமான கொள்முதலுக்கும் நிரந்தர ஒப்பந்த ஆவணத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி செயல்படாமல், வங்கி உத்தரவாதம் அளித்தல் அல்லது அரசு உத்தரவாதம் அளித்தல் ஆகிய இரு பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை நீக்கப் பெயரளவுக்கு பிரான்ஸ் பிரதமரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்படி செல்லாது.
அதுமட்டுமல்லாமல் இரு அரசுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் நடக்கும் போது, நடுவர் மூலம் பணத்தை செலுத்தும் எஸ்க்ரோ(escrow) கணக்கு முறையும் கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டால் நீக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்க்ரோ கணக்கிற்கு பதிலாக வேறுவிதமான பாதுகாப்பு முறையைக் கையாள்வது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகம், பிரான்ஸ் அரசுடன் பேச்சு நடத்தும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எஸ்க்ரோ கணக்கு முறையை செயல்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அரசுக்குக் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நிதித்துறை ஆலோசகர் சுதான்சு மொகந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் அளித்தல், அல்லது அரசு உத்தரவாதம் அளித்தல் ஆகிய பிரிவுகள் இல்லாத நிலையில் இரு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட உள்ளநிலையில், பிரான்ஸ் அரசுக்கு, பணம் பரிமாற்றம் நடக்கும்வரை சில பொறுப்புகள் இருக்கிறது. அதாவது இந்தியா அரசு சார்பில் செலுத்தப்படும் பணம், எக்ஸ்ரோ கணக்கு மூலம் செலுத்தப்பட வேண்டும். அந்த எக்ஸ்ரோ கணக்குகளை பிரான்ஸ் அரசு நிர்வகித்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி வரைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இப்போ து பாதுகாப்பு துறை செயலாளர் ஜி.மோகன்குமார் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் பிரதமர் அலுவலகம் ஈடுபடவில்லை. மிகவும் வெளிப்படையாக ரஃபேல் ஒப்பந்த பேச்சு நடந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு, நவம்பர் 24-ம் தேதி ஜி.மோகன் குமார் எழுதிய கடிதத்தில், ரஃபேல் ஒப்பந்தத்தில் கொள்முதல் குழு நடத்தும் பேச்சுக்கு இணையாகப் பிரதமர் அலுவலகம் பேச்சு நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் அளித்தல் அல்லது அரசு உத்தரவாதம் அளித்தல் ஆகியவை அவசியம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்களும் தி இந்துவிடம் உள்ளன.
இதுவரை வெளிவந்தது…
ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதை இதுவரை இரு கட்டங்களாக தி இந்து(ஆங்கிலம்) வெளிப்படுத்தியுள்ளது.
1. அதில் முதலாவதாக வெளியிடப்பட்ட கட்டுரையில், பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தாலும், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாகக் கோரப்பட்ட 13 சிறப்பு வடிவமைப்பு, மேம்பாட்டு அம்சங்களாலும், காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையும் 41 சதவீதம் அதிகமாகப் போடப்பட்டுள்ளது
2. ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் அதிகமான விலை இருப்பதற்குக் கொள்முதல் குழுவில் யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது. ஆனால், தி இந்து’வுக்கு (ஆங்கிலம்) கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் சார்பில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு(ஐஎன்டி)வில் இருந்த 7 பேர் கொண்ட குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் 3 மூத்த அதிகாரிகள் இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
3. ராஜிவ் வர்மா (இணைச் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர்), அஜித் சுலே (நிதி மேலாளர்), எம்.பி. சிங்(ஆலோசகர்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு மட்டுமே உரிய 13 சிறப்பு அம்சங்கள் வடிவமைப்புக்காக டசால்ட் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ள விலை மிக அதிகமாகும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
4. பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் தவிர்த்து வேறு நிறுவனமும் குறைந்த விலையில் போர்விமானங்களை அளிக்க இந்திய அரசிடம் கோரியது. குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை உள்ளடக்கிய யூரோபைட்டர் டைப்பூன் கன்சோர்டியம் (இஏடிஎஸ்) தொடர்பு கொண்டது.
5. 20 சதவீதம் தள்ளுபடி விலையில் 126 போர் விமானங்களை வழங்குவதாகக் கூறியும் அது நிராகரிக்கப்பட்டது.
6. டசால்ட் நிறுவனம் விலையில் 9 சதவீதம் அளித்த தள்ளுபடிக்காக ‘பாலோ-ஆன் கிளாஸ்’ என்ற சிறப்பு வசதியையும் பாஜக அரசு ரத்துசெய்ய ஒப்புக்கொண்டுள்ளது. ‘பாலோ-ஆன் கிளாஸ்’ என்பது, தற்போது என்ன விலையில் விமானம் கொள்முதல் செய்கிறோமோ அதேவிலையில் அடுத்த கட்டமாக நாம் வாங்கும் விமானங்களில் 50 சதவீதத்துக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்புத் துறை தளவாடங்கள் கொள்முதலில் இந்த ‘பாலோ-ஆன் கிளாஸ்’ என்று கண்டிப்பாக இருக்க வேண்டும். காங்கிரஸ் அரசில் இந்த வசதி இருந்தது. ஆனால், இதை பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
7. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்து பேச்சு நடத்த பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட கொள்முதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழு பேச்சு நடத்தியதற்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சு நடத்தியது 2-வது கட்டமாக வெளிவந்தது.
8. இப்போது மூன்றாவது கட்ட கட்டுரையில் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சங்கள், வங்கி உத்தரவாதம் அளித்தல், கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நன்றி
மூலம்- தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்- போத்திராஜ்