‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த பேட்டியின் தமிழாக்கம்.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு என்பது இட ஒதுக்கீடு பெறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகும்.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக் காடு இடஒதுக்கீடு என்பது அநீதியான ஒன்றாகும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: உயர்ஜாதியினரில் ஏழைக் களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து உங்கள் கருத்து என்ன?
நமது அரசமைப்பு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை ஒருக்காலும் கூறவே இல்லை, அது சமூகத்தில் ஜாதியைக் காரணம் காட்டி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது, இங்கு பொருளாதாரம் என்ற அளவுகோல் கிடையவே கிடையாது, இவர்கள் கொண்டுவந்தது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும்.
அரசமைப்புச்சட்டம் பிரிவு 46ஆம் பிரிவு கூறுவது என்னவென்றால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் சமூகத்தில் சம உரிமை பெற்று வாழவேண்டும், அவர்களுக்கும் சமூகத்தில் சமமான தகுதி கிடைக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது, முக்கியமாக பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக இந்த ஒதுக்கீடு எந்த அளவு பயன்பட்டுள்ளது என்பதை காண்கிறோம், இட ஒதுக்கீடு ஒன்றும் ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் அரசு திட்டங்களுள் ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்., இவர்கள் கொண்டுவந்த இந்த சட்டம் இதுவரை இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அநீதி இழைக்கும் நடவடிக்கை ஆகும். மேலும் இந்தச்சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்.
இதே போன்று முன்பு பி.வி. நரசிம்மராவ் பிரதமராகவிருந்த போது 1992இல் அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உயர்ஜாதியின ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று கூறினார்கள். அது நீதிமன்றத்தால் தூக்கிவீசப்பட்டது, இன்று பாஜக அரசு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது அவ்வளவே!
பாஜக இந்தச் சட்டத்தை கொண்டுவந்து அரசமைப்புச் சட்டத்தில் தில்லுமுல்லு வேலைகளைச்செய்ய முன்னோட்டம் விட்டுள்ளது, ஆனால் இந்திய அரசமைப்புச்சட்டத்தை யாராலும் அசைத்துப்பார்க்க முடியாது, பொருளாதார அடிப்படை குறித்து இந்திய அரசமைப்புச்சட்டத்தில் குறிப்பிடவில்லை. பொருளாதார இட ஒதுக்கீட்டால் சமன்பாடு ஏற்படும் என்று நினைக்கவேண்டாம், இது திணிக்கப்பட்ட ஒன்று ஆகும், உண்மையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஜாதிய கொடுமைகளை நீக்கவேண்டும், இதுதான் அரசமைப்புச் சட்டம் சொல்லும் இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஆகும், பொருளாதார இட ஒதுக்கீட்டால் ஜாதி பாகுபாடு நீங்கிவிடுமா?
நமது நாட்டில் சமூகப் பாகுபாடுகள் ஜாதி அடிப் படையில் தான் உள்ளன; ஜாதிய அடிப்படையில் தான் புறக்கணிப்புகள் இன்றும் தொடர்கின்றன. இன்று பணக் காராக உள்ள ஒருவர் நாளை ஏழையாக மாறிவிடுவார். இது இயற்கையாக நடக்கும் மாற்றமாகும். ஆனால் ஜாதி அப்படி அல்ல, அது பிறப்பில் இருந்தே தொடர்கிறது. செத்தபிறகும் ஜாதி தொடர்கிறது. இங்குதான் ஜாதி தொடர்பான கொடுமைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைந்த பிறகும் தொடர்கிறதே,
கேள்வி: தந்தை பெரியார் அனைத்து வகுப்பாரும் சமமான உரிமை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் வேண்டும் என்று கூறினாரே?
ஆமாம் உண்மைதான் வகுப்புவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித் துவம் குறித்து பெரியார் பேசினார், அதாவது அனை வருக்குமான உரிமைகள். ஆனால் பாஜக கொண்டுவந்தது வெறும் உயர்ஜாதியினர் மட்டும் பயன்படும் திட்டம் ஆகும்.
கேள்வி: காங்கிரஸ் இந்த 10 விழுக்காடு இட ஒதுக் கீட்டை ஆதரித்துள்ளது, தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது, இது திராவிட கொள்கையைச் சுமப்பதாக கூறும் திமுகவின் கொள்கை முரணாக தெரியவில்லையா?
இல்லை, இதுமட்டுமே என்று கூறிவிடமுடியாது பல்வேறு வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இதைத்தான் வேற்றுமையிலும் ஒற்றுமை என்று கூறுகிறோம். ஆனால் தற்போது மிகவும் முக்கிய நோக்கம் மோடி தலைமையிலான பாஜக அரசை அதிகாரத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
கேள்வி: முக்கிய திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயல்வதுபோல் தெரிகிறதே, இருவருடைய தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து உங்கள் கருத்து என்ன?
தற்போதுள்ள அதிமுக முந்தைய அதிமுக போல் இல்லை, அது உருவம் இல்லாத அமீபா போன்று மாறிவிட்டது, இன்றைய அதிமுக வில் தலைமையே இல்லை. மக்களவை துணைத் தலைவரும் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து கடுமையாகஎதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார். ஆனால் எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் இல்லை. அதிமுகவினர் இரட்டை வேடம் போடுகின்றனர். அங்கு தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, அவர்கள் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அதை உறுதியாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்கப் பயப்படுகின்றனர். அதிமுகவை திராவிடக் கட்சி என்று கூறாதீர்கள். திராவிடக் கட்சி என்றாலே அது சமூகநீதிக்கு ஆதரவான நிலைப்பாட்டின்பக்கம் என்றுமே உறுதியாக நிற்கும். இரட்டை வேடம் போடாது.
கேள்வி: தாழ்த்தப்பட்டோர் (தலித்துகள்) – திராவிட அமைப்பில் இருந்து விலகிச்சென்றுகொண்டிருப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே?
அப்படி அல்ல, அப்படி பேசுபவர்கள் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். புரிந்துகொள்ளாமல் அல்லது சுயலாபத்திற்காக இப்படிப்பட்ட செய்தியை பரப்பிவருகின்றனர். உண்மை என்னவென்றால் பட்டியல் இனத்தின் தலைவர்கள் திராவிடர் கழகக் கொள்கையில் நின்று செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பணியும் எங்களின் பணியும் ஒன்றே, திராவிடர் கழகம் சமூகத்தின் அனைத்துக் சமூக அநீதிப் பிரச்சினைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளது, முக்கியமாக சமூகத்தில் அதிகம் புறக்கணிப்பட்ட பிரிவினருக்கு குரல் கொடுப்பது எங்களின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. சிலர் சுயநலத்திற்காகவும், வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதாவது திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
கேள்வி: திராவிடர் கழகம் தமிழ்நாட்டைத்தவிர வேறு எங்கும் வலுவாக செயல்பட்டு வருகிறதா?
திராவிடர் கழகம் என்பது ஒரு பெயர் மட்டுமே, எங்களின் கொள்கைகள் முக்கியம் அந்த கொள்கைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் திராவிடர் கழகங்கள் உள்ளது, பெங்களூருவில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்று ஜனவரி 28-ஆம் தேதி நடை பெற உள்ளது. முக்கியமாக அங்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் வழிமுறை தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறோம். அதில் நானும் பங்கேற்கிறேன் என்றார்.
நன்றி: விடுதலை