அரசியல் ஆதாயத்துக்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அறிவித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியிருக்கிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம்.
இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.
இந்நிலையில் இது தொடர்பாக மாயாவதி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மத்திய அரசின் இந்த முடிவு வரவேறத்தக்கது.
ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் நோக்கம்தான் தவறானது. இந்த முடிவை அரசு முன்னரே அறிவித்திருக்கலாம்.
இப்போது, மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அறிவித்திருப்பதில் அரசியல் ஆதாயத்துக்கான உள்நோக்கம் இருக்கிறது.
இதேபோல் இட ஒதுக்கீடு சலுகையை பல்வேறு சிறுபான்மையினர் சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும் ஏழை எளிய மக்கள், பழங்குடிகள், தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டு முறையை வேலை, கல்வி என்பதில் மட்டும் சுருக்காமல் இதுவரை இல்லாத துறைகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இட ஒதுக்கீடுக் கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50% வரை அதிகரிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.