காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.
இதனால், சென்னையில் பல இடங்கள் போராட்டக்களமானது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இடம் பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் அந்தப் பதிவில், ’’வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’’ எனப் பதிவுசெய்துள்ளார்.