ஆயிரம் குழப்படிகளுக்கு இடையே தொடங்குகிறது ஆர்கே நகர் வேட்பு மனுத்தாக்கல்!

பல்வேறு அரசியல் குழப்படிகளுக்கு இடையே ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

இதையொட்டி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலை கண்காணிக்கவும் முறைகேடுகளை தடுக்கவும் டிசம்பர் 4-ம் தேதி 9 பார்வையாளர்கள் சென்னை வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்னதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தொகுதியில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத் துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 4-ம் தேதி வரை தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் டிசம்பர் 5-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுக்களை திரும்பப் பெற 7-ம் தேதி கடைசி நாளாகும். 21-ம் தேதி வாக்குப்பதிவும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.வேட்புமனு தாக்கல் தொடங்குவதை முன்னிட்டு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் என்.மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் டிடிவி தினகரனும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதால் உற்சாகம் அடைந்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி – ஓபிஎஸ் அணியினர் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனனை மீண்டும் களமிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக ஆட்சி மன்றக்குழு இன்று கூடுகிறது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி உருவாகும் சூழல் உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. தேமுதிகவும் பாமகவும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

வழக்கமாக, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுபவர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று சம்பந்தப்பட்ட தொகுதிக்கு வருவார்கள். அந்த அடிப்படையில், ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான டிசம்பர் 4-ம் தேதி பொதுப் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், சட்டம் ஒழுங்கு பார்வையாளர்கள் என 9 பேர் குழு வர உள்ளது. அவர்கள் தேர்தல் பணிகளில் உடனடியாக ஈடுபடுத்தப்படுவர்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, கடந்த 24-ம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பணப் பட்டுவாடாவை தடுப்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வீடு, வீடாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும், தெருக்களில் தேர்தல் பணிமனைகள் அமைக்கக் கூடாது, வெளி வாகனங்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

பாதுகாப்புக்காக ஆர்.கே.நகரில் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை தொடங்கியுள்ளது. பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க தெருக்களில் வீடியோ கேமராக்களைப் பொருத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் தரும் டோக்கன்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளில் துணை ராணுவப் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே, வாகன சோதனை, வாகனங்களுக்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துணை ராணுவப் படை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 10 கம்பெனியைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படை வீரர்கள் வட மாநிலங்களில் இருந்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை வர உள்ளனர். இவர்கள் ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக நிறுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் விதிமீறல், பணப் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ரவி தலைமையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அது இன்று முதல் செயல்பட உள்ளது.

RK Nagar Byelection Nomination Statrts today

 

 

2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!

Recent Posts