ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு..


ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பிரதான கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் சொத்துகள், வழக்குகள் தொடர்பான 26-ம் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாததால் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.