காவல்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன் கைது..

கொள்ளை,கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ரவுடி புல்லட் நாகராஜன் பல போலீஸ் ஆதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தான்.

இன்று காலை தேனி மாவட்டம் தென்கரையில் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.

இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது.

இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரவுடி நாகராஜன், தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.