கொலை கொள்ளையில் தேடப்படும் ரவுடிகள் மாநாடு நடத்தும் அளவுக்கு தமிழகம் உள்ளது: ராமதாஸ் வேதனை…
தமிழகத்தில் கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்படும் ரவுடிகள் ஒன்று கூடி மாநாடு நடத்தும் நிலை உள்ளது என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் போலீஸாரால் தேடப்படும் பிரபல தாதா பினுவின் பிறந்த நாள் விழாவை நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஒன்று கூடி கொண்டாடினர். அப்போது விழாவிற்கு வரும் வழியில் சிக்கிய போலீஸால் தேடப்படும் பிரபல ரவுடி பல்லு மதன் அளித்த தகவலை அடுத்து போலீஸார் வியூகம் வகுத்து, தனியார் வாகனங்களில் சென்று ரவுடிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் தாதா பினு தப்பித்து ஓடிவிட்டார்.
73 ரவுடிகள் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த கைது விவகாரம் சென்னையில் காலை முதலே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடியிருந்த பெரிய எண்ணிக்கையிலான ரவுடிகளை கைது செய்ததில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் மறுபுறம் போலீஸாரால் தேடப்பட்ட ரவுடிகள் போலீஸ் கையிலேயே சிக்காமல் ஒரு இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் அதை நுண்ணறிவு பிரிவு போலீஸாரால் கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை என்ற வாதம் பரவலாக எல்லோராலும் விமர்சனமாக வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ரவுடிகள் கைது செய்யப்பட்டதை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
”தமிழகத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்படும் ரவுடிகள் சென்னையில் ஒன்று கூடி மாநாடு நடத்தும் அளவுக்குத் தான் தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு உள்ளது. லஞ்சம் கொடுத்தால் ரவுடிகள் மாநாட்டையும் சட்டப்பூர்வமாக்கும் ஆட்சி தானே தமிழகத்தில் நடக்கிறது.”
இவ்வாறு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.