ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் பிரதமர் மோடி..


ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ருவாண்டாவில் உள்ள மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்க உள்ளார்.

இந்திய பிரதமர் மோடி, 5 நாள் பயணமாக, ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக ருவாண்டா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாட உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் பால் ககாமே தொடங்கியுள்ள ‘கிரிங்கா’ (வீட்டுக்கொரு பசுத் திட்டம்) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ருவாண்டாவில் உள்ள 200 குடும்பங்களுக்கு, குடும்பத்திற்கு ஒரு பசு வீதம் 200 பசுக்களை பரிசளிக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ருவாண்டா பயணத்தை முடித்தப் பின் உகாண்டா செல்லும் பிரதமர், அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ (BRICS) மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்தப் பயணத்தில், பாதுகாப்பு, கலாச்சாரம், வர்த்தகம், விவசாயம், பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.