அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்குவது, மதுபான பார்களை அரசே நடத்துவது, மணல் குவாரி விற்பனைகளை ஒழுங்குபடுத்துவது எனப் பல்வேறு அதிரடி முன்னெடுப்புகளுக்கான ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு வருவாயைப் பெருக்க, அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள தாத்தா, பாட்டி காலத்து நடைமுறைகளை மாற்றினாலே போதும் எனக் கூறியுள்ளார் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய சமூக ஆர்வலர் சுப. உதயகுமாரன்.

அவர் சொல்லும் யோசனைதான் என்ன? இதோ இதுகுறித்த அவரது முகநூல் பதிவு:   

மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்களின் கவனத்திற்கு,

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் அரசுக்கு வருமானம் வரும் வழிகளில் ஏராளமான முட்டுக்கட்டைகளையும், தடங்கல்களையும் ஏற்படுத்தி வைத்து, மக்களுக்கு சிரமங்களை, மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சொத்துவரிக் கட்டுவதற்காக கிராம அலுவலகத்துக்குச் சென்றால், பெரும்பலான வேளைகளில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருப்பதில்லை. வெளி வேலைகளுக்காக வெளியேச் சென்று விடுகிறார்கள். அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருக்கும் பிற ஊழியர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தருவதில்லை. “கிராம நிர்வாக அதிகாரி வரட்டும், ஆனால் எப்போது வருவார் என்றோ, எந்தெந்த நாட்களில் அலுவலகத்தில் இருப்பார் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது” என்று மக்களைத் தள்ளிவிடுகிறார்கள்.

பணம் கட்ட வருகிறவர் செலுத்தப்போவது ஒரே ஒரு ரூபாயாக இருந்தாலும், அரசுக்கு வரும் வருவாயை எளிதாக, விரைவாகப் பெற வழிவகைகள் செய்து வைப்பதுதான் அறிவுடைமை. அதுதான் சிறந்த நிதி நிர்வாகமாக அமையும்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலகங்களில் இந்த எளிய உண்மை பின்பற்றப்படுவதில்லை. அங்கே இன்னும் நம் தாத்தா, பாட்டி தலைமுறை நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஒட்டுமொத்த உலகமே கணினி மயமாக்கப்படப் பிறகும், கிராம நிர்வாக அலுவலகங்களில் கணினி பயன்படுத்தப்படுவதில்லை. வரவுச் சீட்டுக்கள் (ரசீதுகள்) இன்றும் கைகளாலேயே எழுதப்படுகின்றன. அந்த ரசீதுப் புத்தகங்களின் அடிக்கட்டைகளை யாரும், எங்கேயும் பாதுகாத்து வைப்பதாகத் தெரியவில்லை. மிகவும் பிற்போக்கான கற்கால முறையே அங்கே கடைபிடிக்கப்படுகிறது.

அதே போல, ஒரு மாநில அரசு அலுவலகத்துக்குப் போய் ரூ.25-க்கு ஒரு (செல்லான்) கட்டணம் கட்டவேண்டுமென்றால், செல்லான் விண்ணப்பங்களைக்கூட அங்கே வைத்திருப்பதில்லை. எங்காவது அலைந்து திரிந்து அதனை வாங்கி அதே அலுவலகத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அவர்கள் பணம் கட்டும் விபரங்களை (Header) கையால் எழுதியோ அல்லது ரப்பர் ஸ்டாம்பு அடித்தோ மக்களிடம் கொடுத்து SBI வங்கிக்குச் சென்று கட்டச்சொல்கிறார்கள். இந்த நிரப்பப்பட்ட செல்லான் விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சில SBI வங்கிக் கிளைகளுக்குச் சென்று, கால்கடுக்கக் காத்திருந்து, பணத்தைக் கட்டிவிட்டு, மீண்டும் இதே அலுவலகத்துக்குத் திரும்ப வந்து செல்லானைக் கொடுக்க வேண்டும்.

அனைத்து மாநில அரசு அலுவலகங்களிலும் கணக்கர்(கள்), சம்பளம் போடும் அதிகாரி(கள்) இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் அந்தந்த அலுவலகங்களிலேயே மக்களிடமிருந்து உரியப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, துறை சார்ந்த ரசீது ஒன்றைக் கொடுத்துவிட்டு, பிறகு மாநில அரசின் கருவூலத்துக்கு உரிய வழிகளில் பணத்தைக் கட்டலாமே?

மக்களுக்கு நேரும் அலைச்சல், நேர விரயம், மனஅழுத்தம், வேலைகளில் ஏற்படும் கால தாமதம் போன்றவை பற்றியெல்லாம் இந்த நாட்டில் யாரும் கவலைப்படுவதில்லை. இன்றைய நிலையில் அரசுக்கு மக்கள் பணம் கட்டுவதை எவ்வளவுக்கு எவ்வளவு கடினமாக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடினமாக்கி வைத்திருக்கின்றன மாநில அரசுத் துறைகள்.

இம்முறைகளை மேம்படுத்தி, அரசுக்கு வருவாய் வருவதை எளிதாக்கி, மக்களின் அனுபவங்களை இனிதாக்கிட மாண்புமிகு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சுப. உதயகுமாரன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான தகுதித் தேர்வு எப்போது?

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…

Recent Posts