S.Ramakrishnan’s Kathavilasam
_______________________________________________________________________________________________________
மு.சுயம்புலிங்கம்
பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே கவனமாகத் துடைத்து எறிந்துவிட்டு அடையாளமற்ற மனிதர்களாக வாழ்வதற்குப் பழகிவிட்டோம்.
சப்தமாகச் சிரிப்பதற்கும் வாய்விட்டு அழுவதற்கும்கூடக் கூச்சமாக இருக்கிறது. அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துதான் உணவகங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது. நண்பனின் தோளில் கைபோட்டுக் கொள்வது அநாகரிகமாகிவிட்டது. மூத்திரம் பெய்வதற்குக்கூட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எப்படியோ ஏதேதோ நகரங்களில் வேலைகள் செய்து குழந்தைகள் பெற்றுப் பிழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை.
கிராமம் உலர்ந்த நத்தைக்கூட்டைப் போல உயிர்ப்பற்றுப் போய்விட்டிருக் கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சாலைகளும் தெருவிளக்கு களும் வந்துவிட்டன. ஆனால், அமைதியும் பரஸ்பர அன்பும் வெளியேறிப்போய்விட்டன. ஊரைப் பிரிந்து வராமல் நாய்கள் மட்டுமே தெருவில் குழி பறித்துப் படுத்துக்கிடக்கின்றன. ஆனால், அவை குரைப்பதை நிறுத்திப் பல வருடங்களாகிவிட்டன. யாரைக் கண்டு குரைப்பது? சுபாவம் திரிந்து போனது ஊரும் மனிதர்களும் மட்டுமல்ல… இயற்கையும்தான்! தீபாவளிக்கு முதல்நாள் இரவு ஒரு ஆட்டோவில் ராயபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். டிரைவரைப் பார்த்ததுமே தெற்கிலிருந்து வந்தவர் என்று தெரிந்தது. எந்த ஊர் என்று விசாரித்தேன். கடம்பூர் என்றார். நட்பான குரலில் பேசியபடியே வந்து கொண்டிருந்தபோது, ‘சார் வழியிலே அஞ்சு நிமிஷம் ஒரு கடையில நிறுத் திட்டுப் போயிடலாமா?’ என்று கேட்டார். சரி என்றேன்.
ஆட்டோ, பிராட்வேயின் சந்துகளுக் குள் புகுந்து சௌகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நின்றது. மரப் படிகள் கொண்ட கட்டடம் அது. இருவருமாக படிகளில் ஏறிப்போனோம். மங்கிய லைட் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே வயதானவர் ஒருவர் பைஜாமா ஜிப்பா அணிந்து, பார்ப்பதற்கு குஜராத்தியைப்போல் இருந்தார். ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய கையிலிருந்த சிறிய மஞ்சள் பையிலிருந்து ஊதா நிறத்திலிருந்த ஒரு பட்டுப்புடவையையும் துவைத்து மடித்திருந்த பட்டு வேஷ்டி ஒன்றையும் எடுத்து அவரிடம் நீட்டினார். ஏதோ அசூயையான பொருளைத் தொடுவது போன்ற முகபாவத்துடன் அந்தப் பொருள்களை மேஜையில் வைக்கச் சொல்லிவிட்டு வயதானவர் தனது கண்ணாடியை அணிந்து கொண்டார். புடவையின் கரையைப் பிரித்துப் புரட்டிவிட்டு அதிலிருந்து ஒரு நூலை உருவிப் பார்த்தார். மேஜையிலிருந்த பட்டு வேஷ்டி சரிந்து கீழே விழவே, டிரைவர் அவசரமாக எடுத்து மடித்தார். வேஷ்டியில் வெற்றிலைக் கறை படிந்து அழியாமல் இருந்தது.
எவ்விதமான உணர்ச்சியுமின்றி வயதானவர் மேஜை டிராயரிலிருந்து ஐந்நூறு ரூபாய் எடுத்து நீட்டினார். டிரைவர் சற்றே தயக்கத்துடன் ‘ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு… விலை நாலாயிரம். வேஷ்டி வேறு இருக்கு, பார்த்துக் கொடுங்க’ என்றார். கொச்சை யான தமிழில் குஜராத்திக்காரர் ‘இந்த வேஷ்டி சரியில்லை. கறையிருக்கு. அதுக்கு 50 ரூபாய் தான் தரமுடியும். நாங்க சேலை பார்டரை மட்டும்தான் கட் பண்ணி விக்கமுடியும். அதுக்கு மேலே பணம் தர முடியாது’ என்றார். பேரம் நீண்டு கொண்டே போய் முடிவில் எண்ணூறு ரூபாய் கிடைத்தது.
ஆட்டோ கடற்கரைசாலையில் வந்துகொண்டிருந்த போது, டிரைவர் தானாகவே சொன் னார்… ”நல்ல நாளுக்குத் துணி எடுக்க கையில் காசில்லை சார். வீட்ல மூணுபிள்ளைக இருக்கு. அவளுக்கு வேற சேலை எடுக்கணும். எங்க கல்யாணத்துக்கு எடுத்த பட்டுத்துணி… அதை வெச்சிருந்து என்ன செய்யப் போறேன். அதான் வித்துட்டேன். இப்பவே மணி பத்தாச்சு. உங்களை இறக்கி விட்டுட்டுத் திரும்பி வரும்போது பாண்டிபஜார்ல ஏதாவது புதுத்துணி வாங்கிட்டு வீட்டுக்கு போகணும் சார்.”
என்னால் பதில் பேச முடியவில்லை. ஆட்டோ இருண்ட சாலைகளில் ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் பேசிக்கொண்டே இருந்தார். ”ஊர்ல வீடு, நிலம் எல்லாம் இருந்துச்சு சார். விவசாயம் பண்றதுக்கு லோன் போட்டோம். மழையில்லை. விளைஞ்சதுக்கு விலையில்லை. லோனைக் கட்ட முடியலை. பேங்க்காரன் கழுத்தைப் பிடிச்சான். எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு ராத்திரியோட ராத்திரியா கள்ளப்பயக மாதிரி தூங்குற பிள்ளைகளைத் தோள்ல தூக்கிப்போட்டுக் கிட்டு ரயிலேறி வந்துட்டோம். பிழைக்கணுமில்லையா…ஆட்டோ ஓட்டப் பழகிட்டேன்.”
வெடிச் சப்தங்கள் வழியெங்கும் கேட்டுக் கொண்டிருந்தன. சாலையில் எரிந்துகொண்டு இருக்கும் நியான் விளக்குகளின் வெளிச்சத்தையும் வழியெங்கும் மின்னும் விளம்பரப் பலகைகளின் வசீகரத்தையும் தாண்டி, கண்ணுக்குப் புலப் படாத இருள் ஊரெங்கும் வழிந்துகொண்டு இருக்கிறது. டிரைவர் மௌனமாகிவிட்டார்.
வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து திரும்பி நின்றது. அருகிலிருந்த மைதானத்திலிருந்து வெடித்த வாணவெடி ஒன்று ஆகாசத்தில் ஏழு நிறங்களில் ஒளித் துகள்களை வாரியிறைத்தது. குழந்தையைப்போல அதை வியப்போடு பார்த்தார் டிரைவர். எனக்குத்தான் வழியில் நடந்ததை நினைத்து நடுக்கமாக இருந்தது. அன்றிரவெல்லாம் குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியைப்போல உடம்பு முழுவதும் படர்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு இரவும் ஏதோவொரு குடும்பம் ஊரைக் காலி செய்து மாநகரம் நோக்கி வந்து கொண்டுதானிருக்கிறது. இப்படி வந்தவர்களில் ஊர் திரும்பிப்போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? முதுகில் உள்ள மச்சத்தைப் போல, சொந்த ஊர் இனி அவர்களால் பார்க்கவே முடியாமல் போய்விடுமா? யோசிக்க யோசிக்க மனச்சோர்வும் பயமுமாக இருந்தது. பின்பு, அது உருமாறி ஆத்திரமாக வந்தது. ஏதாவது புத்தகம் படித்து மனதைத் திருப்பி விடலாம் என்று எனக்கு பிடித்த ஹெமிங்வேயின் சிறுகதைகளை வாசிக்க முயன்றேன். கண்கள் காகிதத்தில் படிய மறுத்து அலைந்தன. திடீரென யோசனை வந்ததுபோல மு.சுயம்பு லிங்கத்தின் ‘ஊர்க்கூட்டம்’ என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். முதல் பக்கத்தில் சுயம்பு, தான் மதுரையில் கண்ட ஒரு காட்சியை எழுதியிருக்கிறார்.
பெரிய சுத்துக்கெட்டு வீடு. ஏழு ஏர் சம்சாரி, எந்த நாடு தீய்ந்து போனாலும் அவர் வீட்டு தானியப்பட்டறையில் தவசம் குறையாது. அந்த வீட்டுப் பெண்கள் முகத்தில் உரசிப் பூசிய மஞ்சளும் அழியாத சிரிப்புமிருக்கும். அப்பேர்ப்பட்ட ஆள் விவசாயம் பொய்த்துப்போய் பிழைக்க வழியின்றி மதுரையின் டவுன்ஹால் ரோட்டில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்காரவைத்துக்கொண்டு கடை கடையாக காசு கேட்டு யாசகம் வாங்கிக்கொண்டு அலைகிறார். பூமி அதே இடத்தில்தான் இருக்கிறது. மனித வாழ்க்கைதான் பொய்த்துப் போய்விட்டது. வாசிக்க வாசிக்க நாக்கில் மண் ருசி தென்படத் துவங்கியது. நினைவுகள் காரை உதிர்வதுபோல பொறுக்குகளாக உதிரத் துவங்கின.
சுயம்புலிங்கத்தின் உலகம் அசலானது. வேப்பலோடை மனிதர்கள் மிகுந்த கோபக்காரர்கள். மழையற்றுப் போய் வறுமை பீடித்த ஊரில் வாழ்ந்துகொண்டு தன் ஊரைக் கடந்து செல்லும் மழை மேகங்கள் மீது கோபம்கொண்டு அவற்றைப் படிய வைப்பதற்காக விரட்டிப் போகிறவர்கள். திங்க பழம் தராத மரத்தின் மீதும், உட்கார நிழலற்ற பூமி மீதும் அவர்களது கோபம் பீறிடுகிறது. மண்ணோடு அவர்கள் கொண்டுள்ள பந்தம் மூர்க்கமானது. நினைவுகள் தான் அவர்களது ஒரே ஆறுதல். இதே ஊரில் மழை பெய்திருக்கிறது. நூறு நூறு பறவைகள் இலைக் கூட்டங்களில் விசிலடித்திருக்கின்றன. மேகத்தை வருடிச் செல்லும் மின்னல், இருட்டுக்கு உதை கொடுத்திருக்கிறது. பிறப்பும் சாவும் நடந்தேறியிருக்கின்றன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வால் அறுந்த பல்லியைப்போல மூளியாகிவிட்டது ஊர்.
சுயம்புலிங்கத்தின் கதை களிலே எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘ஒரு திருணையின் பூர்விகம்’ என்ற ஒரு பக்கக் கதை. கிராமத்து வாழ்வின் உக்கிரமும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளும் கொண்ட கதை. கதையென்று அதில் அதிகச் சம்பவமில்லை. இடிந்துபோன வீட்டின் திண்ணையைப் பற்றிய சிறு குறிப்புகள்.
திண்ணை என்பது வீட்டின் சிறகுகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சிறகுகள்போலத் திண்ணைகளிருந்தன. அங்கு எப்போதும் யாராவது ஒருவர் படுத்துக்கொண்டோ உட்கார்ந்துகொண்டோ இருப்பார்கள். பெரும்பாலும் அது வயதானவர்களின் வசிப்பிடம். சில வீடுகளில் வம்பு பேசும் சிற்றிடம். திண்ணையைப் பார்க்கும்போது அது வீட்டுக்கும் தெருவுக்கும் இடையில் ஒரு பாலத்தைப்போல இருப்பதாகவே தோன்றும். வெளியாட்கள் யார் வந்தாலும் திண்ணையில் தான் அமர்வார்கள். பேசிக்கொண்டிருப்பார் கள்.வெற்றிலை போடு வார்கள். திண்ணை ஒரு வகையில் சௌகரியம், மறுவகையில் தொல்லை.
சுயம்புலிங்கம் காட்டும் திண்ணைக்காட்சி வேறு விதமானது.
வீட்டுத் திண்ணையில் கண் தெரியாத பாட்டி பல காலம் கிடந்து இறந்திருக்கிறாள். அதே திண்ணையில் ஓடையில் வண்டி கவிழ்ந்து, எலும்பு முறிந்த தாத்தா படுக்கை யாகவே கிடந்திருக்கிறார். அதைவிடவும் அம்மாவின் இறந்தஉடலை வைத்திருந்தது இந்தத் திண்ணையில்தான். அம்மா மோட்டுவளையில் ஒரு துணி சுருக்கிட்டு தூக்கில் தொங்கினாள். காரணம் ஒன்றும் பெரிதானதில்லை. வறுமையின் காரணமாகக் கழுத்தில்கிடந்த சங்கிலியை அப்பா கழற்றி விற்றதை சகித்துக்கொண்ட அவளுக்கு, காதில் போட்டிருந்த கம்மலைக் கழற்றியதைத் தாங்கமுடியவில்லை. மூளிக் காதோடு எப்படி ஊருக்குள் நடமாடுவது என்று நாண்டு கொண்டுவிட்டாள். அந்த உடல் இதே திண்ணையில்தான் கிடத்தப்பட்டிருந்தது. பின்னொரு நாள் அப்பாவும் குளிர்காலத்தில் இதே திண்ணையில் பனி தாங்காமல் நடுங்கி விறைத்து செத்துப்போயிருந்தார். ஒரு மழையில் திண்ணை கரைந்து தரையோடு தரையாகிவிட்டது. ஆனால், அந்த நினைவுகள் இலைகளில் தேங்கிய மழைத் துளிகளைப்போல சொட்டிக்கொண்டே இருக்கின்றன.
இந்தக் கதையை எத்தனையோ முறை வாசித்துவிட்டேன். ஒவ்வொருமுறை வாசித்து முடிக்கும்போதும் உடல் முழுவதும் காமாலை பீடித்ததுபோல துக்கம் பரவிவிடுகிறது. கண்களின் வழியே கண்ணீர் வெளிப்படுகிறது. ஆனால், அது இதயத்திலிருந்துதான் ஊற்று எடுக்கின்றது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது இந்தக் கதை.
‘கால் இல்லாமல்,
கை இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க.
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை’
என்று சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதை இருக்கிறது. இதைப் படித்த பிறகுதான் வயிற்றுப்பாடு என்பது எத்தனை போராட்டமிக்கது என்று எனக்குப் புரியத் துவங்கியது!
மு.சுயம்புலிங்கம் கிராமத்து விவசாயி. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமம். Ôஊர்கூட்டம்Õ என்று ஒரேயரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் கரிசல்காட்டின் வெக் கையும் மணமும் நிறைந்தது. ஊரில் விவசாயியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் அற்றுப் போனதும், சென்னைக்கு இடம் மாறி காட்டாங்குளத்தூர் பகுதியில் சிறிய ஸ்வீட் ஸ்டால் நடத்திக்கொண்டிருக்கிறார். பசியும் போராட்டமும் அவரது இலக்கியக் கனவுகளை அரித்துத் தின்றுவிட்டன. ஆனால், அவரது படைப்புகளில் வேப்பலோடையின் நினைவுகள் களிமண்ணைப்போல ஈரமும் பிசுபிசுப்புமாக அப்படியே இருக்கின்றன.
நன்றி : அழியாச்சுடர்
____________________________________________________________________________________________________