சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்துள்ள நிலையில்,
மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது.
இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு ஏராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யக்கோரி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தை நோக்கி 5 நாட்கள் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் பேசிய பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் 24 மணிநேரத்தில் மாநில அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும், இல்லையெனில் பெரிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
இந்தநிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து தரப்பினருடன் திருவாங்கூர் தேவசம்போரடு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதனிடையே சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘சபரிமலை விவகாரத்தில் எங்கள் நிலைபாட்டை ஏற்கெனவே தெளிவாக தெரிவித்து விட்டோம். தனிப்பட்டமுறையில் மாநில அரசுக்கு நிலைப்பாடு இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமே நாங்கள் செயல்படுத்துகிறோம்.
யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அணுமதிக்க முடியாது. சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம்.
உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை’’ எனக் கூறினார்.