சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2018 செப். 28ல் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலை கோவிலில் உள்ள தடையை நீக்கியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில், கேரள அரசு உறுதியாக இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளை சேர்ந்தோர் சபரிமலை கோவிலில் திரண்டனர். சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சபரிமலை பகுதியில் மட்டுமின்றி கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. .

இவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் இதன் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.எஃப், நாரிமன், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 56 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாம் என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.