முக்கிய செய்திகள்

கண் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல்..

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல  திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது.
சந்திரயான்-2  விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை.
அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருந்தனர்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை.
இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது என்று கூறினார்.
இரவு 2 மணிக்கும் மேலாக பெங்களூர் இஸ்ரோ மையத்தில்  விஞ்ஞானிகளுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடிய மோடி, காலை எட்டு மணிக்கு மீண்டும் இஸ்ரோ மையத்திற்கு வந்து விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் இமைப்பொழுதும் சோர்ந்துபோகாத ஈடு இணையற்ற உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி தெரிவித்தார். இடையூறுகளால் இலக்குகளில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியளித்த மோடி விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே கிடையாது.
முயற்சி முயற்சி மீண்டும் மீண்டும் முயற்சிதான் என்றார். இஸ்ரோவின்  விண்வெளி திட்டங்கள், அதன் சாதனைகளை பாராட்டிய மோடி விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமைப்படுவதாக தெரிவித்த மோடி இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு நாடும் அரசும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இப்போதும் கூட ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது என்று கூறிய மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மீதான முழு நம்பிக்கையை வெளியிட்டு எதிர்கால திட்டங்களுக்காக வாழ்த்து கூறினார்.
பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.
அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தேற்றினார்.