முக்கிய செய்திகள்

சீன ஓபன் பேட்டமிண்டன்: சிந்து, சாய்னா பங்கேற்பு

புஸ்கோவ் நகரில் இன்று தொடங்கும் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஸ்கோவ் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சாய்னா சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அந்த நம்பிக்கையுடன் சாய்னா களம் காண்பார். இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

இந்த ஆண்டில் 2 சூப்பர் சீரிஸ் மற்றும் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவார். சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் இன்று ஜப்பான் வீராங்கனை சயாகா சாடோவை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தேசிய போட்டியில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய இந்திய வீரர் பிரனாய் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய தென்கொரியா வீரர் லீ டாங் கென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் வர்மா தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பிரிஸ் லிவெட்டெஸ்சை சந்திக்கிறார். காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
Saina, sindhu To take part in China open