முக்கிய செய்திகள்

சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது!

மான்வேட்டை ஆடிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட 5 பேர் மீதும் ஜோத்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அரிய வகை மான்களை வேட்டையாடிய இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.  குற்றவாளியான சல்மான்கானுக்கு   5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். அடுத்த மாதம் 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருப்பதாக சல்மான் கானின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதியை ராஜஸ்தான் திடீரென இடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம்  87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.