முக்கிய செய்திகள்

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!


தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும்  6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலை எடுத்துச் செல்லவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிதாக மணல் குவாரிகளை திறக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் தேவைக்கு வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் பாழாவதை தடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும்.

 

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த போது மணல்குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக மணல் தட்டுப்பாடு அதிகரித்து, தற்போது வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மணல்குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.