கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் காவல் ஆணையரிடம் விசாரணை நடத்தச்சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3வது நாளாக இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார். இதனிடையே, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக்கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் இன்று விசாரணை நடத்துவதாக தெரிவித்ததை அடுத்து அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்றும், காவல் ஆணையரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை சிபிஐ பெறக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணைபிறப்பித்தனர். அதே நேரத்தில், ராஜீவ்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பொது இடமான மேகாலயா தலைநகர் சில்லாங்கில் சிபிஐ முன் ஆஜராக முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து, கொல்கத்தா காவல் ஆணையர், மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.