முக்கிய செய்திகள்

சசிகலா மற்றும் உறவினர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை


சசிகலா மற்றும் உறவினர் வீடுகளில் 2-வது நாளாக தொடர்ந்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
147 இடங்களில் தொடரும் வருமானவரித் துறையினர் சோதனையில் ரூ.1012 கோடி வரி ஏய்ப்பு மற்றும் 60 போலி நிறுவனங்களின் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.அதிமுகவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இன்றும் சோதனை தொடர்ந்து சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 147 இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்றிருக்கும் சோதனையில், 60 போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இந்த சோதனையில் ரூ. 1012 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதை அடுத்து இது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. 187 இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், நகைகள், வைர வைடூரியங்கள் சிக்கின. இதே போன்று ஜெயலலிதா உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய பூங்குன்றன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 350 கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் சசிகலா மற்றும் முக்கிய பிரமுகர்களின் பினாமியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது. திருச்சியில் இளவரசியின் சம்பந்தி களியபெருமாள் வீட்டிலும் இரண்டு பைகளில் நகைப் பெட்டிகள், டைரிகள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே திவாகரன் கல்லூரியில் பணம், நகைகள் பிடிப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.