சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..

அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அக்கட்சியை சேர்ந்த புகழேந்தியிடம் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சிறையில் சிறப்பு சலுகைகளுக்காக அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, “இந்தப் புகார் உண்மைதான். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்” என பரிந்துரை செய்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 6 மாதங்களுக்கு முன், அமமுகவின் கர்நாடக செயலாளர் புகழேந்தி,

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுடன் கைதான மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் கடந்த வாரம் சின்ன சேலத்தை சேர்ந்த ஆனந்த், சசிகலாவின் வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இரண்டாம் கட்டமாக பெங்களூரு மாநகர துணை கண்காணிப்பாளர் திம்மையா தலைமையிலான குழு புகழேந்தியிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணி வரை நீடித்தது. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில் புகழேந்திக்கும் சசிகலா, டிடிவி தினகரனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

புகழேந்தியின் தொலை பேசி அழைப்பு பட்டியலை வைத்து, சம்பந்தப்பட்ட காலத்தில் அவருடன் தொடர் பில் இருந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, சிறையில் சசிகலா பயன்படுத்திய காஸ் அடுப்பு, குக்கர், டிவி உள்ளிட்டவற்றை கொடுத்தது யார் எனவும் கேட்கப்பட்டது.

மேலும் புகழேந்தியின் தொலைபேசி அழைப்பு பட்டியலை அலசியதில் சிக்கிய தகவல்களைக் கொண்டு சந்தேகப்படும் நபர்களின் விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட ஆஸ்திரேலியா பிரகாஷிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது.

இவர் சிறை வாளகத்தில் சிறை அதிகாரிகளுடன் பேசுவது, சிறைக்குள் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகளை வைத்து, அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேவேளையில் ஆஸ்திரேலியா பிரகாஷின் பெயர் சிறை வருகை பதிவேட்டில் பதியாதது குறித்து அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.