சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சசிகலாவுக்கு மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவருக்கு கரோனா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், சசிகலா உடல்நலம் குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 98 ஆக இருந்த நிலையில் இன்று ஆக்சிஜன் அளவு 95 ஆக இருக்கிறது. நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலையில் ஆக்சிஜன் அளவு 95 என்ற அளவில் உள்ளது.
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது