சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது சசிகலாவும் மதுசூதனனைப் பார்ப்பதற்காக அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். அதிமுக கொடி கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் மருத்துவமனைக்கு வந்த சசிகலா, மதுசூதனனைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மீது பற்றுக் கொண்டவர் என்பதால் மதுசூதனின் உடல்நிலை குறித்து பார்க்க வந்ததாகவும், அவரது உறவினர்களிடம் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
அண்மையில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவரும் சசிகலா, அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதாவின் காரில் வந்தது அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.