சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்தனர்.

ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகமாக பெற்ற டி.டி.வி.தினகரனுடைய இந்த வெற்றி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், திருவண்ணாமலையில் பிரபலமான மூக்கு பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி டி.டி.வி.தினகரன் இதே மூக்கு பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றது போல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட டி.டி.வி.தினகரன் இரவு ஓசூரில் தங்கினார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று (வியாழக்கிழமை) மதியம் டி.டி.வி.தினகரன் சந்திக்க இருக்கிறார் என்றும், அப்போது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சசிகலாவிடம் ஆலோசிக்க இருப்பதாகவும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்