பன்முகத்தைக் காக்க வந்த இன்முகமே வருக! : தலையங்கம்

தத்துவார்த்த அரசியலை முன்னெடுத்தல், அன்பு, சேவை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இயக்கம், தீராத உரையாடல் ஆகியவற்றை விரும்பும் புதிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் ராகுல் காந்தி என்கிறார், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளராக இருந்த சுதீந்திரா குல்கர்னி. அத்தோடு அவர் நிறுத்திவிடவில்லை. இந்த நாட்டுக்கு தேவைப்படும் தலைவர் என்றும், அவர்தான் அடுத்த பிரதமராக வருவார் என்றும் கூட புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இத்தனை புகழ்ச்சிக்கும் ராகுல் தகுதியானவரா என்ற கேள்விக்கு நேரடியாக நம்மிடம் இப்போது பதிலில்லாமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில், இந்த நாட்டுக்கு ராகுலைப் போன்ற ஒரு தலைவர் தேவைப்படுகிறார் என்ற கருத்தை மறுக்க முடியாது. மதமும், சாதியும் குறுங்குழு இயக்க வாதங்களால் மட்டுமே எதிர்த்து தகர்த்தெறிந்து விடக் கூடிய அளவுக்கு மென்மையானவை அல்ல. தேசிய இனங்களின் பண்பாட்டுத் தொன்மத்தையும் விட பல மடங்கு கெட்டியாக அவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய இறுகிய அமைப்புகளை எதிர் கொள்வதற்கும், முறியடிப்பதற்கும் வசீகரமும், வலிமையும் மிக்க வெகுசனப் பேரியக்கம் சார்ந்த ஒரு தலைவர் தேவை என்பதுதான் யதார்த்தம். அந்த இடத்திற்கு நல்ல வேளையாக ராகுலைப் போன்ற ஒரு தலைவர் தற்போது வாய்த்திருக்கிறார்.

இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முக அடையாளத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மிகத் தெளிவாக திட்டமிடப்பட்ட வியூகங்களுடன் மத, சாதியவாத சக்திகள் அதனை அரங்கேற்றி வருகின்றன. 2001 ஆம் ஆண்டு குஜராத் மதக்கலவரம் குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் வசந்திதேவி, மதவாதிகளிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலான வேலைத் திட்டம் தயாராக இருக்கிறது. அதனை எதிர்க்கும் நம்மைப் போன்றவர்களிடம் 6 ஆண்டுகளுக்கான வேலைத்திட்டம் கூட இல்லை என்று வேதனைப்பட்டார்.

அப்படிப்பட்ட நாட்டில், இப்படிப் பட்ட சூழலில் காங்கிரஸ் பேராயக் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றிருப்பது மிகப் பொருத்தமானது மட்டுமல்ல. அவசியமானதும் கூட. சமதர்மம், வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஜனநாயகப் பாதை என்ற இனிய கனவுகளின் ஆனந்த பவனமாக நவ இந்தியாவை நிர்மானிக்கப் பாடுபட்ட  நேருவின் பேரனல்லவா! பல்வேறு மதங்கள், எண்ணற்ற மொழிகள், எத்தனையோ தேசிய இனங்கள் என, வண்ணங்களின் பெரு நதியாக இந்தியச் சமூகம் பெருக்கெடுப்பதற்கான ஜனநாயக வாய்க்காலை சமைத்த சமதர்ம சிற்பியின் தலைமுறைத் தொடர்ச்சியாக வந்த தவிர்க்க முடியாத தலைவன் அல்லவா ராகுல்?

ராகுலுக்கு தகுதியில்லை, திறமையில்லை என்பதெல்லாம் புளித்துப் போன வாதங்கள். ஒரு நாட்டின் பிரதமரை, மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்காக 20 நாட்கள் குஜராத்தில் முகாமிட வைத்திருப்பதன் மூலம், தனது வலிமையை ராகுல் நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரசிடமும், ராகுலிடமும், ஆயிரம் குறைகள் இருக்கலாம்… ஆனால், மதவெறி என்ற மன்னிக்க முடியாத மாபாதகத்திற்கு எதிராக இந்திய அளவில் எழுந்து நிற்கும் வலிமை இப்போதும் காங்கிரசுக்கு மட்டுமே இருக்கிறது. எனவே, இந்தியப் பன்முகத்தைக் காக்க வந்த இன்முகமே வருக என காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராகுலை மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து வரவேற்கட்டும்.   

Say welcome to Rahul