கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து வருகின்றன. இதில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் வர்த்தக நிமித்தமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து முன்னர் வெளிநாடுகளுக்குப் போக உச்ச நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெற்று சென்றதை போலவே இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார் கார்த்தி சிதம்பரம். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் முன்னர் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அதே நிபந்தனைகளின் அடிப்படையில் ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.

SC Grand permission to Karhthi Travel to US And Other Countries