முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன? : ப.சிதம்பரம் கேள்வி..


உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கடந்த ஜனவரி மாதம் கூடி உச்ச நீதிமன்றத்துக்கு மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரது பெயர்களை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்ட மத்தியஅரசு, ஜோசப் நியமனத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இந்து மல்ஹோத்ரா உச்ச நீதிபதியாக பதவி ஏற்கப்போவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம், நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? அல்லது உத்தரகாண்ட் வழக்கில் அவர் அளித்த தீர்ப்பா? எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அம்மாநிலத்தில் அமைய உத்தரவிட்டவர் நீதிபதி ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.