பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு பின்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு,

அங்குள்ள கல்வி முறைகளைக் கற்று வந்தது. நேற்று சென்னை வந்த பின்லாந்து குழுவினர், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தினந்தோறும் பள்ளி தொடங்குவதற்கு முன்னால், மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழக அரசின் சார்பில், பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.