முக்கிய செய்திகள்

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்…

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகள் அந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் என்பதால் அதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று 2018-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களை முதல் கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்குத் தடை விதித்தும்,

குற்றம் சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.

எனினும், இந்தத் தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தை முன்வைத்து, எஸ்சி, எஸ்டி அமைப்புகள் பழங்குடி அமைப்புகள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவேற்றியது.
ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 13-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தனர்.

அதன்பின் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த மாதம் 18-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்ஆர். ஷா, பிஆர் கவே ஆகியோர் அளித்த தீர்ப்பில், ” நாடு சுதந்திரம அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், எஸ்சி, எஸ்டி மக்கள் சமத்துவமாக நடத்தப்படுவதில்லை.

இன்னும் அவர்கள் தீண்டாமையையும், சமூகரீதியாக புறக்கணிப்பையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறார்கள்.

அரசியலைப்புச் சட்டம் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு அரசமைப்பு பிரிவு 15-ன் கீழ் முழுமையான பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் அவர்கள் சமூகரீதியாக வேறுபாட்டுடனும், அவமானங்களையும் சந்திக்கிறார்கள்.

எஸ்சி, எஸ்டி சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது, பொய் வழக்குகள் போடுவது போன்றவை எல்லாம் சாதியின் பிரிவுகளால் வருபவை அல்ல, மனிதர்களின் தவறுகளால் உருவாகின்றன.

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்க முடியாதவை.

அரசியலமைப்புச் சட்டத்தின் தாத்பரியத்துக்கே எதிரானவை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப்பெற்றுக்கொள்கிறோம்” என உத்தரவிட்டனர்