எஸ்சி,எஸ்டி சட்டத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்


‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் குறித்த, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதனால், அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி., – எஸ்.டி., சட்டத்தின் கீழ் புகார் அளித்த உடனேயே, விசாரணை இன்றி, எந்த ஒரு நபரையும் கைது செய்ய தடை விதித்து, உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், எஸ்.சி., – எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப்போக செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யும் படி, மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல் மற்றும், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் வேணுகோபால், ”உச்ச நீதிமன்ற உத்தரவால், எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது. ”மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டத்தை, நீதிமன்ற உத்தரவால் மாற்ற முடியாது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் கூறியதாவது: பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையிலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினரின் உரிமைகள், 100 சதவீதம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.