தூத்துக்குடியின் மணப்பாடில் கடலில் உருவாகும் மணல் திட்டுக்களால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதிப்படுவதாகக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனையை அத்தொகுதி திமுக எம்.பியான அவர் மக்களவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது குறித்து மக்களவையின் திமுக துணைத்தலைவரான கனிமொழி எம்.பி சிறப்பு கவன ஈர்ப்பு விதியில் பேசியதாவது: தூத்துக்குடியில் மணப்பாடு கிராமத்தில் மணல் திட்டுக்கள் உருவாவதன் காரணமாக மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.1.18 கோடி செலவிட்டு மணல் திட்டுக்களை நீக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், ஒரே ஆண்டில் மீண்டும் மணல் திட்டுக்கள் உருவாகி விட்டது.
ரூ.18 லட்சம் செலவிட்டு தூத்துக்குடி நிர்வாகம், ஐஐடியுடன் இணைந்து மணல் திட்டுக்கள் உருவாவது குறித்து விவாதித்தது. இதன் கடல் பகுதில் 15 கி.மீ தூரம் மணல் அரிப்பாலும், 10 கி.மீ தூரம் மணம் திட்டுக்கள் உருவாவதாலும் பாதிப்புள்ளதாக மத்திய அரசின் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு மணல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர்களும், மணல் திட்டுக்கள் உருவாகாமல் இருக்க தூண்டில் வளைவுகளையும் உடன் அமைக்க வேண்டும்.
இதற்கு நீண்ட நாள் தீர்வாக சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி அப்பகுதியின் கடலில் படகில் சென்று ஆய்வு செய்திருந்தார். அப்போது அங்குள்ள மீனவப் பொதுமக்கள் அவரிடம் எடுத்துரைத்த குறைகளை
மக்களவையில் மத்திய அரசின் கவனத்திற்கு கனிமொழி கொண்டு வந்துள்ளார்.-17-09-2020