ஊதிய உயர்வு கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 29 பேர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள ஊதிய முரண்பாடு களையப்படவில்லை எனக் கூறி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட முயன்றதால், கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500 ஆசிரியைகள் உள்பட ஆயிரத்து 400 பேருக்கு போலீசார் உணவு ஏற்பாடு செய்த போதும், ஆசிரியர்கள் உணவருந்த மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த 16 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விடுவிக்கப்பட்ட அவர்கள், மீண்டும் பேரணியாக பள்ளி கல்வித்துறை அலுவலகம் நோக்கி சென்று முழக்கமிட்டனர்.
பேரணியாக சென்ற போது 13 ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.