முக்கிய செய்திகள்

சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு..


கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் எரித்துக்கொண்டு மாண்டுபோனார். சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் அன்புச்செழியனிடம் கடன்வாங்கி கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
விவாதப் பொருளாக மாறிய மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல, இதற்கு முன்பும் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். நெல்லை நகரில் கந்து வட்டி கொடுமையை எதிர்த்து போலீஸில் புகார் கொடுத்த கோபி என்ற ஆட்டோ ஓட்டுநர் கந்துவட்டி கொடுமைக்காரர்களால் அடித்தே கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக் கொடுமையை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேலுச்சாமி கந்துவட்டிக் கொடுமைக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இப்போதும் மாநிலம் முழுவதும் சிறுதொழில் முனைவோர், சிறு வணிகர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கந்துவட்டி கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அன்றாட செலவுக்கு காலையில் ரூ.1000 கடன் வாங்கி மாலையில் ரூ.1250 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். ‘ரன் வட்டி’, ‘மீட்டர் வட்டி’ போன்ற கந்துவட்டி கொடுமைகள் மாநிலம் முழுவதும் கோலோச்சுகிறது. அரசு வங்கிகளில் வட்டி 12 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை இருக்குமென்றால், தனியார் கடன் நிறுவனங்களின் வட்டி 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அநியாய வட்டியாக இருக்கிறது.
கந்து வட்டிக்காரர்கள் நடத்திவரும் சாம்ராஜ்ஜியம் குறித்த தகவல்கள் மலைப்பைத் தருகின்றன. திருநெல்வேலியில் வெளிப்பட்ட சம்பவத்தில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் வட்டிக்காரருக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அசோக்குமார் தற்கொலை சம்பவம் தமிழக திரைத்துறையே கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது. அன்புச்செழியனுக்கு பின்னால் உள்ள வலைப்பின்னலும், இயங்கி வரும் ஊழல் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் என்ற தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரவில்லை.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யும் அரசும், அரசு வங்கிகளும் சிறு-குறு தொழில் முனைவோர், சிறு வணிகர்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு கடன் வசதி அளிக்க மறுப்பதாலேயே இவர்கள் கந்துவட்டிக் கொடுமைக்காரர்களிடம் சிக்குகிறார்கள். கந்துவட்டிக் கொடுமையை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் விட்டத்தில் உள்ளது, அமலாக்கப்படவில்லை. அநியாய வட்டி வாங்கிக் கொழிக்கும் கந்துவட்டி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையால் அதிர்ச்சியான நடிகர் சங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தவறிழைத்தோரை சட்டம் தீவிரமான தண்டனை பெறச் செய்யட்டும், அது இனி அதீத வட்டி வாங்குவோர்க்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். விஞ்ஞானம் ஓங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் கற்கால கட்டப் பஞ்சாயத்துக்களையும், அதீத வட்டிமுறைகளையும் தீக்கிரையாக்குவோம் நெறிப்படுத்தப்பட்ட யாருக்கும் அழுத்தம் தரா, பயனுறும் பொருளாதார திட்டங்களை வகுப்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகமே அதிர்ந்து போயுள்ள இத்தகையச் சூழலில் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ள இயக்குனர் சீமான், ‘அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. சாமானியர்களை நம்பி அன்புச்செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அரசு வங்கியே ரூ.1 லட்சம் கடனுக்கு கட்டி வைத்து அடிக்கவில்லையா? கடனை கொடுத்தவர் கேட்கிற முறையில் கடுமை கேட்கிற போது தன்மான இழப்பாக கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்புச்செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாது’ என்று பேசியுள்ளார். இது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல.
கந்துவட்டி கொடுமைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை அமலாக்கிட வேண்டுமென்றும் மக்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் வலுவான குரல் ஓங்கி ஒலிக்கிற போது கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக பேசுவது சரியான அணுகுமுறையல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மத்திய, மாநில அரசுகள் முறையான கடன் வாய்ப்புகளை ஏற்படுத்தி, சிறு குறுந்தொழில்கள், திரைத்துறை மற்றும் சாமானிய மக்கள் வரையில் முறையான, குறைந்த வட்டிக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்வதோடு அன்புச்செழியன் உள்ளிட்ட கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும், கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை அமலாக்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.