பீஹாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 7 பேர் பலியாகினர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் 11 பெட்டிகள் கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை டிஐஜி கூறியதாவது:
” பிஹாரின் ஜோக்பானி ரயில்நிலையத்தில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையம் நோக்கி சீமாஞ்சல் எக்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
வைஷாலி மாவட்டம், ஹஜிபுரில் உள்ள மன்ஹார் அருகே ஷாதே புஸ்ரக் பகுதி அருகே இன்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தபோது ரயில் தடம்புரண்டது.
ரயிலில் இருந்த 2-ம்வகுப்பு படுக்கை உள்ள 3 பெட்டிகள், ஒரு ஏசி கோச், 4 சாதாரண பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் கவிழ்ந்தன. அதிகாலை நேரம் என்பதால், ரயில் முழு வேகத்தில் வந்ததது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டவுடன் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ரயில்வே போலீஸாருக்கும், மீட்புப்படையினருக்கும் தகவல் அளித்தனர். ரயில் பெட்டியில் ஏராளமான உடல்கள் இருப்பதாலும், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பாதலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கி இருந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே அமைச்சகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. சோன்பூர் 06158221645, ஹஜிபூர் 06224272230, பராவுனி 06279232222 இந்த உதவி எண்களில் பயணிகளின் உறவினர்கள் விசாரித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வைறு ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வேதுறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ” ஜோக்பானி-ஆனந்த் விஹார் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பிஹாரின் சஹாரி பஸ்ருக் பகுதியில் இன்று தடம்புரண்டது. இதில் 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 6 பேர் பலியானார்கள். மீட்புப்பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடந்து வருகின்றன ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்விபத்தில் பலியான பயணிகள்குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. அனைத்து மருத்துவச் செலவுகளையும் ரயில்வே ஏற்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.