“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..


அதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் இணைந்து செம்ம போத ஆகாத படத்தை தயாரித்து நடித்துள்ளார், செம்ம போத ஆகாத அதர்வா எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்கரு

அதர்வா படத்தின் முதல் காட்சிலேயே காதல் தோல்வியில் இருக்க, அதை மறக்க மூச்சு முட்ட குடிக்கின்றார், அந்த சமயத்தில் கருணாகரன் உன் கவலையை மறக்க சரியான வழி இன்னொரு பெண்ணை அடைவது தான் என்று தவறான ஐடியா கொடுக்கின்றார்.

அதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு ஒரு பெண் வர, அதர்வாவிற்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம் தான் இருக்கின்றது, சரி பழைய காதலியை மறக்கவேண்டும் என்று இந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் அவர் வெளியே செல்லும் நிலை ஏற்படுகின்றது.

வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்த பெண் இறந்துள்ளார், அதர்வாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, யார் இவளை கொன்றார்கள் என தேட, ஆரம்பிக்க அதற்கான விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றி ஒரு பார்வை

அதர்வா தமிழ் சினிமாவில் இன்னும் சில வருடங்களில் தவிர்க்க முடியாத நடிகராகிவிடுவார், தன் நடிப்பின் தரத்தை பரதேசியிலேயே நிரூபித்தாலும், அவருக்கு ஒரு கமர்ஷியல் வெற்றி தேவைப்படுகின்றது, அதற்காகவே தேர்ந்தெடுத்த கதை தான் இந்த செம்ம போத ஆகாத போல, படம் முழுவதும் ஒரு வித பதட்டத்துடன் பயணிப்பது என சிறப்பாக நடித்துள்ளார்.

படம் கொலை, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று சென்றாலும் படம் முழுவதும் கருணாகரன் தனக்கு கிடைத்த கேப்பில் கலாட்டா செய்கின்றார், அதிலும் இறந்த பிணத்துடன் ஒரு அறைக்குள் அவர் சிக்கிக்கொண்டு செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு முழு கேரண்டி.

ஆனால், போதை கொலை பழி ஹீரோ மீது, அதை தொடர்ந்து ஒரு கும்பல் சேஸிங் என ’ப்ரியாணி’-யை இயக்குனர் பத்ரி சைடிஷாக எடுத்துக்கொண்டார் போல, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நன்றாக இருக்கின்றது, அந்த சூட்டோடு படத்தை முடிப்பார்கள் என்று பார்த்தால், அதை தொடர்ந்து சேஸிங், சண்டை என கொஞ்சம் படம் நீள்கின்றது, இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் இறந்த அடுத்தக்கனம் எதையும் யோசிக்காமல் அதர்வா பாலக்காடு போவது, அங்கு தடயங்களை வைத்து வில்லனை கண்டுப்பிடிப்பது என லாஜிக் அத்துமீறல் தான்.

கோபி அமர்னாத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக இருக்கின்றது, அதிலும் படத்தில் ஆரம்பக்காட்சி அதர்வா வீட்டில் அந்த பெண் வந்தபிறகு நடக்கும் காட்சியெல்லாம் நமக்கே ஒரு வித போதை தான். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான், பாடல்கள் கோட்டை விட்டாலும், பின்னணியில் மிரட்டியிருக்கின்றார்.

ப்ளஸ்

கடைசி வரை படத்தை கலகலப்பாக எடுத்து சென்றவிதம்.

யுவனின் பின்னணி இசை, கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

மைனஸ்

லாஜிக் மீறல்கள் பல இடங்களில், படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்ததால் கொஞ்சம் பழைய படம் போல் தோன்றுகின்றது. அதர்வா காதல் காட்சிகள் பெரிதும் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால், கண்டிப்பாக ஜாலியான ஒரு ரைடாக இந்த செம்ம போத ஆகாத இருக்கும்.