இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறினார்.
சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பொதுவுடைமை போராளியான நல்லகண்ணு, கடந்த 1925ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர்.
பல்வேறு அரசியல் முன்னெடுப்புகள், தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டவர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்த அவருக்கு தமிழக அரசு தகைசால் விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நல்லகண்ணுவின் பிறந்தநாள் அன்று மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்து வந்தார். அந்த வகையில் இன்றைய தினம் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர், நல்லகண்ணுவை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.