மூத்தபத்திரிகையாளரான இளையபெருமாள், 70களில் சொந்த ஊரில் இருந்த டூரிங் டாக்கீஸில் எம்ஜிஆரின் நவரத்திரனம் படத்தைப் பார்த்து கலாய்த்து, அதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் கோபித்த அனுபவத்தைத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு
அப்போது ஒரு சிற்றூரில் இருந்தோம். அங்கே ஒரே ஒரு திரையரங்கம்தான். புதுப்படங்கள் வெளியாகி நகரங்களில் வெற்றி பெற்றால், அங்கே தாமதமாக வரும். தோல்வியடைந்த படமாக இருந்தால் விரைவில் வந்துவிடும். அப்படி வந்த படம்தான் எம்.ஜி.ஆர். நடித்த “நவரத்தினம்.”
நானும் எனது நண்பனும் சிவாஜி ரசிகர்கள். அதே திரையரங்கில் “நவராத்திரி” ஓடிய போது (முதல் வெளியீட்டில் அல்ல) இரண்டு முறை பார்த்து ரசித்திருக்கிறோம். பலநாள் வியந்து பேசியிருக்கிறோம். “நவரத்தினம்” படத்தின் “ஒன்லைன்” எங்களுக்குத் தெரிந்ததால், படம் “காமெடியாக இருக்கும். ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம்…” என்று பேசிக்கொண்டு சென்றோம்.
அந்த திரையரங்கில் தரை, பெஞ்ச், ஒரே ஒரு வரிசை சோபா உண்டு. பொதுவாக பெஞ்ச் போகும் நாங்கள், அன்று எம்.ஜி.ஆர். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்க்க விரும்பி, தரை டிக்கெட் எடுத்தோம். தரை என்றால், மண் அல்ல, உண்மையிலேயே தரை.
முதல் அரை மணி நேரத்திலேயே படம் தாங்கமுடியவில்லை. நான் போகலாம் என்று நண்பனை நச்சரித்தேன். அவன், “கடைசிவரை பார்த்துவிட்டு போவோம், வாத்தியார் காமெடி நிறைய இருக்கும்” என்றான். இடையிடையே சில காட்சிகளில் அவன் விசில் அடித்து கலாய்த்தான். எனக்கு விசில் வராது. கைதட்டினேன். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த அதிதீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்களான மீனவச் சகோதரர்கள், திரும்பிப் பார்த்து முறைத்தார்கள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் எங்கள் கலாய்ப்பை தொடர்ந்தோம்.
“Ladke se mili ladki” என்று ஹிந்தியில் தொடங்கும் ஒரு பாடல். எம்.ஜி.ஆர். ஜரினா வஹாப் பாடுவதாகக் காட்சி. தொடக்கத்தில் ஹிந்தியில் இருக்கும்… பிறகு தமிழில் வரும் என்று நினைத்தோம். எல்லோரும் அப்படித்தான் நினைத்தார்கள். மாறாக, முழுப் பாடலுமே ஹிந்தியில் தொடர்கிறது. எம்.ஜி.ஆர். ரசிகர்களே வெறுத்துப் போய் விசிலடித்தார்கள். நண்பனின் விசிலும் பறந்தது. இருவரும் காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு கோரஸாக “நவராத்திரியாவது… ….ராவது. தலைவர் பிச்சு உதறுகிறார்” என்று சத்தமாகச் சொல்லியவாறே அவன் விசிலடிக்க நான் கைதட்ட… எம்.ஜி.ஆர். அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்.
“எலேய்… சத்தம் காட்டாம படம் பாருங்க. இல்லேன்னா தூக்கி வெளிய வீசிருவேன்” என்று எச்சரித்தார் ஒரு சகோதரர். வாட்டசாட்டமான உடம்பு. கையைப் பார்த்தாலே வலு புரிந்தது. நாங்கள் இருவரும் மெலிந்த தேகத்தினர். உண்மையிலேயே அவர் சொன்னபடி தூக்கி வீசுவது சாத்தியம்தான்.
“நாங்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான்…” நண்பன் சொன்னான்.
“தெரியும்ல… யாரு எம்.ஜி.ஆர். ரசிகன்னு எங்களுக்கு தெரியும்ல…” என்று படபடத்தார் அவர்.
அப்போதுதான் அந்த “லட்கே….” ஹிந்தி பாடலில் “தஸ்…தஸ்..தஸ்…” என்றொரு வரி. எம்.ஜி.ஆர். லயித்துப் பாடிக் கொண்டிருந்தார். எங்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.
“எலேய்… சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னல சிரிப்பு… உருப்படியா வீடு போய் சேரமாட்டீங்க…” என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார் அந்தச் சகோதரர்.
நான் எழுந்து நண்பனை கையைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளிக்கொண்டு வந்தேன். திரையரங்கிலிருந்தே வெளியேறிவிட்டோம். “தம்” அடித்தவாறே, இருவரும் நடந்தை நினைத்து ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டோம். வெகுநாட்கள் வரை, நினைவுக்கு வரும்போதெல்லாம் நண்பன் “தஸ்…தஸ்… தஸ்…” என்று சொல்லி, எம்.ஜி.ஆர். போல நடித்துக் காட்டி, சிரிப்பான். நானும்.
அநேகமாக ஹிந்தியில் முழுப் பாடல் இடம்பெற்ற முதல் தமிழ்ப் படம் எம்.ஜி.ஆரின் “நவரத்தினம்” படமாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். திரை ஆய்வாளர்கள் கூடுதலாக அறியலாம்.
சிவாஜியை வைத்து “நவராத்திரி” (1964) படத்தை இயக்கிய அதே ஏ.பி. நாகராஜன்தான் எம்.ஜி.ஆரின் “நவரத்தினம்” (1977) இயக்குநர்.
ஏ.பி. நாகராஜன் நெருக்கடியில் இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர். அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார். “நவராத்திரி எனக்கு பிடித்த படம். சிவாஜி போல என்னால் நடிக்க முடியாது. ஒரு ஹீரோ, ஒன்பது ஹீரோயின்கள் என்று கதையை தயார் செய்யுங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொன்னதாகவும் அதன்படி வெளிவந்த படமே “நவரத்தினம்” என்று ஒரு தமிழ் நாளிதழில் படித்தேன்.
“லட்கி சி மிலி லட்கா…” பாடலை எழுதியவர் பாலிவுட் பாடலாசிரியர் பி.எல்.சந்தோஷி. படத்தின் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் என்பது கவனத்திற்குரியது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற வரலாற்றுக் கலைஞனை நினைக்கும் போதெல்லாம், குறிப்பாக அவரது “நவராத்திரி” படத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்த திரையரங்க அனுபவம் நினைவுக்கு வரும்.
இன்று (ஜூலை 21) நடிகர் திலகத்தின் நினைவு நாள்.